செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள பகுதி

வங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

Published On 2020-11-23 08:08 GMT   |   Update On 2020-11-23 08:08 GMT
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். 

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சூறாவளிக் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 25ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News