செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -இந்தியா சாதனை

Published On 2021-06-21 16:51 GMT   |   Update On 2021-06-21 16:51 GMT
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா 2-வது அலை குறையத்தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 3-வது அலை பாதிப்பை தடுப்பூசி போடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். மேலும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். அந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 69 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 8.30 மணி நிலவரப்படி 80.95 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நேற்று 30 லட்சத்து 39 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 42 லட்சத்து 65 ஆயிரத்து 157 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


‘கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிகப்படியான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக, கடினமாக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News