செய்திகள்
வாட்ஸ்அப்

கிசான் முறைகேடு: வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்கள் தகவல் அனுப்பலாம்- சிபிசிஐடி அறிவிப்பு

Published On 2020-09-19 01:46 GMT   |   Update On 2020-09-19 07:05 GMT
கிசான் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல்களை அனுப்பலாம் என்றும், சரியான தகவல்கள் அனுப்புவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை:

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது இந்திய அரசால் முழு நிதி உதவியுடன் 1.12.2018 முதல் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 3 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 3 சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. திட்ட வழிகாட்டுதல்களின்படி தகுதியான விவசாயிகள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

தகுதியற்ற பல விவசாயிகள் அதிகாரிகள் மற்றும் அவுட் சோர்சிங் நபர்கள் வாயிலாக சட்டவிரோத பதிவினை செய்து பயன் அடைந்துள்ளனர் என்ற புகார்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. மூலம் இதுவரை 13 குற்ற வழக்குகள் தகுந்த சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் புலன் விசாரணை நடந்து வருகிறது.

சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. தலைமையில் ஐ.ஜி. மற்றும் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 18 இன்ஸ்பெக்டர்கள் களப்பணி ஆதரவுடன் ஒரு சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. வழக்குகளின் புலன் விசாரணையில் இதுவரை 52 பேர் இந்த மோசடியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



அந்தந்த துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தகவல் அறிந்தோர் உபயோககரமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

தகவல் கொடுப்போரின் தகவலில் உள்ள விவரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு பொருத்தமான வெகுமதி வழங்கப்படும்.

தகவல்களை தொலைபேசி எண்- 044 28513500, ‘பேக்ஸ்’ எண்(தொலைநகல்) - 044 28512510, ‘வாட்ஸ்-அப்’ எண்- 94981 81035 ஆகியவை மூலமாகவும், cbcid2020@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News