தொழில்நுட்பம்

ஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்

Published On 2019-04-25 05:46 GMT   |   Update On 2019-04-25 05:55 GMT
கூகுள் நிறுவனம் ஃபீச்சர்போன் மாடல்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Android



ஸ்மார்ட்போன் இயங்குதளங்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு தளம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டை தொடர்ந்து ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

இவை தவிர ஃபீச்சர்போன்களுக்கென தனி இயங்குதளமாக கை ஓ.எஸ். போன்றவையும் இருக்கின்றன. ஃபீச்சர்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பெரும் நிறுவனங்கள் இந்த தளத்தில் தங்களது சேவைகளை வழங்க முயற்சிக்கின்றன.

அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கி வருவது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த இயங்குதளம் தொடுதிரை வசதியற்ற மொபைல் போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. 



புதிய இயங்குதளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், குரோமியம் வலைதளத்தின் மூலம் இது சார்ந்த விவரங்கள் கசிந்தது. கூகுள் புதிய இயங்குதளம் பற்றிய ஸ்கிரீன்ஷாட்களை வலைதளத்தில் பதிவிட்டு பின் உடனடியாக அதனை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும், ஸ்கிரீன்ஷாட்கள் நீக்கப்படும் முன் அவற்றை தனியார் வலைதளம் ஒன்று படம்பிடித்துவிட்டது. அந்த கையில், புதிய இயங்குதளம் ஆண்ட்ராய்டு ஓரியோ பதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடுதிரையில்லா சாதனங்களுக்கான இயங்குதளம் உருவாக்க கூகுள் இரண்டு ஆண்டுகள் பழைய இயங்குதளத்தை தேர்வு செய்திருக்கும் நோக்கம் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

புதிய இயங்குதளம் இந்த ஆண்டு நடைபெறும் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கூகுளின் புதிய இயங்குதளம் கை ஓ.எஸ்.க்கு நேரடி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் கூகுள் நிறுவனம் இயங்குதளத்திற்கு பெரிய பங்குகளை பெற முடியும்.

புகைப்படம் நன்றி: 9to5google
Tags:    

Similar News