செய்திகள்
விபத்தில் சிக்கிய கார்

ஓடைக்குள் கார் பாய்ந்து 4 பேர் பலி - மாப்பிள்ளை பார்க்க சென்ற போது பரிதாபம்

Published On 2019-09-14 17:12 GMT   |   Update On 2019-09-14 17:12 GMT
கள்ளக்குறிச்சி அருகே மாப்பிள்ளை பார்க்க சென்ற போது ஓடைக்குள் கார் பாய்ந்த விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50), விவசாயி. இவரது மனைவி சாந்தி(47). இவர்களுடைய மகள் ஷியாமளா(27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஷியாமளாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக ஏழுமலை, சாந்தி, இவரது தம்பி பாலாஜி(40), தங்கை சித்ரா(42), அண்ணி ஜெயக்கொடி(48), உறவினர் சிவக்குமார்(49) ஆகியோர் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் சந்தவாசலுக்கு நேற்று அதிகாலை புறப்பட்டனர். காரை சிவக்குமார் ஓட்டிச் சென்றார்.

இவர்களது கார் நேற்று அதிகாலை 6 மணியளவில் கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச்சாலையில் விருகாவூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் பின்பக்க வலது புற டயர், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் சிவக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த ஓடைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஏழுமலை, பாலாஜி, சித்ரா, ஜெயக்கொடி ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். சாந்தி, சிவக்குமார் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய காரை, கிரேன் எந்திரம் மூலம் ஓடைக்குள் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்த தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு விபத்தில் 3 பேர் பலியாகினர். அதன் விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் மாலூர் அருகே உள்ள மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணசாமி மகன்கள் ஆனந்த்குமார் (30), அனில்குமார் (26), முனிராஜ் மகன் ஸ்ரீகாந்த் (20), சுப்பிரமணியன் மகன் நந்தகுமார் (24), ரவிக்குமார் மகன் ஜோசாந்த்(18), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் மற்றொரு ஸ்ரீகாந்த் (26) மற்றும் நாகேந்திரன் (28).

இவர்கள் 7 பேரும் பெங்களூரில் இருந்து திருநள்ளாறில் உள்ள ஒரு கோவிலுக்கு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். காரை ஆனந்த்குமார் ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீன்சுருட்டி அருகே தழுதாழை மேடு கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆனந்த்குமார், அவரது தம்பி அனில்குமார் மற்றும் நாகேந்திரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News