ஆன்மிகம்
தீர்த்தவாரியையொட்டி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் தொடக்கம்

Published On 2021-10-19 06:54 GMT   |   Update On 2021-10-19 06:54 GMT
மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் தொடக்கத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த அபயாம்பிகை உடனான மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கி கொண்டதாக ஆன்மிக புராணங்கள் கூறுகின்றன.

எனவே ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் சாமி புறப்பாடு இன்றி அஸ்திரதேவர் மட்டும் காவிரி துலா கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு துலா உற்சவம் நடந்தது.

இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் சாமி வீதியுலா செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

துலா உற்சவத்தின் முதல் தீர்த்தவாரியான நேற்று அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனான அய்யாறப்பர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியின் 2 கரைகளிலும் எழுந்தருளினர். அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இந்த துலா உற்சவத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவமாக சிவாலயங்களில் திருக்கல்யாணம், தேர் திருவிழா, அமாவாசை தீர்த்தவாரி, புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரி என்றழைக்கப்படும் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News