செய்திகள்
கோப்புபடம்

தொண்டாமுத்தூர் அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி பலி

Published On 2020-11-23 13:21 GMT   |   Update On 2020-11-23 13:21 GMT
தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பேரூர்:

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையம் அம்மன் வீதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 72). இவர் நேற்று காலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பில் இருந்து திடீரென்று காட்டு யானை ஒன்று வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார்.

ஆனால் அதற்குள் அந்த காட்டு யானை பாப்பம்மாளை துரத்தி சென்று பிடித்து தூக்கி வீசி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். காட்டு யானை தாக்கி மூதாட்டி இறந்தது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மூதாட்டியின் குடும்பத்தினரிடம் ரூ.50 ஆயிரத்தை நிவாரணமாக வழங்கினர்.

இது போல், குப்பேபாளையம், வாத்தியார் தோட்டத்தை சேர்ந்தவர் ராணியம்மாள் (65). இவர் தனது தோட்டத்து வீட்டு வாசலை நேற்று காலை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று திடீரென்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணியம்மாளை, அந்த காட்டு யானை துதிக்கையால் தாக்கியது.

இதில் அவருக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து கூச்சலிட்டனர். இதனால் மிரண்ட காட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து அவர்கள் ராணியம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நேற்று காலை ½ மணி நேர இடைவெளியில் 2 பேரை காட்டு யானை தாக்கி உள்ளது. இதனால் ஒரே யானை தான் 2 பேரையும் தாக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பேரூர் அருகே காட்டு யானை தாக்கி மருதம்மாள் என்ற மூதாட்டி இறந்தார். தற்போது மேலும் ஒரு மூதாட்டி யானை தாக்கி இறந்ததால் குப்பேபாளையம் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News