செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர்

Published On 2021-05-18 03:51 GMT   |   Update On 2021-05-18 03:51 GMT
கரூரில் எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது. உடலை வீட்டில் இருந்து கொண்டு வந்து எரியூட்டி, அஸ்தியை அளிப்பது வரையில் அனைத்து செலவுகளும் உட்பட மொத்தம் ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு இந்த எரியூட்டும் மையத்தில் பணியாற்றிய பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இப்போது இந்த மையம் கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.



இந்த எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எரியூட்டுவதற்கான முழு செலவையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்றிருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், கரூர் மின் மயானத்தில் அடக்கம் செய்ய, எரியூட்ட கட்டணம் கேட்பதாக இது வரை எந்த புகாரும் வரவில்லை. நகராட்சி பணியாளர்கள் மூலமாக காலை முதல் இரவு வரை புக்கிங் செய்யப்பட்ட அனைத்து உடல்களையும் தகனம் செய்து அஸ்தியை அவர்களிடத்தில் பணியாளர்கள் அளித்து வருகின்றனர்.

இப்போது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய கூறியுள்ளோம். அந்த செலவுத் தொகை முழுவதையும் நான் அளிக்க உள்ளேன் என்றார்.

Tags:    

Similar News