ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை

Published On 2020-12-16 06:41 GMT   |   Update On 2020-12-16 06:41 GMT
சிதம்பரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
சிதம்பரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் 29-ந்தேதியும், 30-ந்தேதி தரிசனமும் நடைபெற இருக்கிறது. வழக்கமான காலங்களில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து துறை அதிகாரிகள், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், தாசில்தார் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தீட்சிதர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவிழாவுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் கோவில் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களைஅனுமதிக்க வேண்டுமென தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சப் - கலெக்டர் மதுபாலன் பேசுகையில், இக்கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் கடலூர் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்படும். இதுதொடர்பாக மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
Tags:    

Similar News