செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வருகை

Published On 2021-05-10 18:12 GMT   |   Update On 2021-05-10 18:12 GMT
வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்துள்ளன. அவை 2-வது முறையாக தடுப்பூசி போடுபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 5-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு 5,500 டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவை ஓரிரு நாட்களில் தீர்ந்து விட்டன. அதனால் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன. எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் வந்துள்ளன. எனவே முதன் முறையாக கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த மருந்துகள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே முதல் தடுப்பூசி போட்டவர்கள் குறிப்பிட்ட நாளில் 2-வது தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே தற்போது வந்துள்ள 7 ஆயிரம் தடுப்பூசிகள் 2-வது முறை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 2-வது கட்ட தடுப்பூசி போடப்படும். அதேபோன்று ஏற்கனவே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்த பகுதிகளில் 2-வது தடுப்பூசி செலுத்துவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும். தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News