தொழில்நுட்பம்

ஒரே மாதத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ

Published On 2019-02-21 08:23 GMT   |   Update On 2019-02-21 08:23 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக டிராய் அறிவித்துள்ளது. #RelianceJio



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்திருக்கிறது. மற்ற முன்னணி நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதே காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 85.6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 

ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. மற்றும் எல்.டி.இ. என மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பர் மாத இறுதியில் 117.17 கோடியில் இருந்து டிசம்பர் மாத இறுதியில் 117.6  கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 0.36 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.87 கோடியாக இருக்கிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.03 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

பகுதிவாரியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாடு முழுக்க தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக டிராய் அறிவித்திருக்கிறது. வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தது. டிசம்பர் 2018 இல் மட்டும் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் என டிராய் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News