செய்திகள்
கேஎஸ் அழகிரி

சட்டமன்ற தேர்தலில் தேவையான தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெறும்- கேஎஸ் அழகிரி உறுதி

Published On 2021-01-10 01:16 GMT   |   Update On 2021-01-10 01:16 GMT
சட்டமன்ற தேர்தலில் தேவையான தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியில் கடந்த 2-ந்தேதி 32 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதிய மாவட்ட தலைவர்களுடனான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இதில் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத், தேசிய பொதுச்செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாத நிலை உள்ளது. தொகுதிகளை கேட்டு பெறவேண்டிய இடத்தில் தான் இருக்கிறோம். எனவே வருகிற தேர்தலில் தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவோம். தேவையான தொகுதி என்பது குறைவான தொகுதி என்று அர்த்தம் அல்ல. காங்கிரசுக்கு இருக்கும் பலம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதிகளை கேட்போம். இந்த தேர்தலை பொறுத்தவரை எந்த தொகுதியிலும் இறக்குமதி வேட்பாளர்கள் இருக்க மாட்டார்கள்.

அனைத்து மாவட்ட தலைவர்களும் உங்கள் தொகுதியில் கட்சியின் பலம், தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்புங்கள். தமிழக காங்கிரஸ் கட்சி மீது ராகுல்காந்தி அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அவர் எந்த உதவியையும் செய்ய தயாராக உள்ளார். தொகுதிகளை பெற்றுத்தருவது எங்கள் கடமை. அதே நேரத்தில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டியது உங்கள் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், எம்.எல்.ஏ. விஜயதரணி மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News