செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அரசியல் கட்சிகள், தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2019-10-04 04:39 GMT   |   Update On 2019-10-04 04:39 GMT
அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை:

கோவை விமான நிலையத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. எனவே இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்யவேண்டும். இது தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். இந்த விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டும்.

சாலையோரங்களில் பேனர்கள் வைப்பது தேவையற்றது. மற்ற நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது. ஆனால் இங்கு தான் பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் போன்றவை உள்ளது. இது தேவையற்றது.

சென்னை வரும் சீன அதிபருக்கு பேனர் வைக்க அரசு விதிவிலக்கு கேட்டு இருக்கின்றார்கள்.

அவரை வரவேற்கும் விதமாக நமது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சில இடங்களில் பேனர் வைக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. பேனர்கள் வைக்க கூடாது என்பது பா.ம.க வின் கொள்கை. அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் இதை தவிர்க்க வேண்டும்.

நீட் மருத்துவ படிப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு நீட் சேர்க்கை குறித்தும் விசாரித்து, அதில் தவறு செய்த மாணவர்களையும் தண்டிக்க வேண்டும்.

கோவை தடாகம் பகுதியில் செம்மண் அதிகளவு கடத்துகின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்க வேண்டும். செம்மண் கடத்த காரணமானவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் கார் மூலமாக ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News