லைஃப்ஸ்டைல்
வாடகை தாய் சட்டங்கள்

வாடகை தாய் சட்டங்கள்

Published On 2019-09-30 02:31 GMT   |   Update On 2019-09-30 02:31 GMT
வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையை செயல்படுத்தும் மருத்துவமனைகளை நடத்துபவர்கள், இந்த சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும்.
உலக அளவில், வாடகைத் தாய் முறை அதிகம் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்படுகிறது. அதனால், வாடகைத் தாய் சட்ட (ஒழுங்குமுறை) மசோதா 2019, ஜூலை மாதம் மக்களவையில் முன் வைக்கப்பட்டுள்ளது. வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையை செயல்படுத்தும் மருத்துவமனைகளை நடத்துபவர்கள், இந்த சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும்.

இந்த மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவர், எம்ப்ரியாலஜிஸ்ட் ஆகியோர் வாடகைத்தாய் நடைமுறைக்காக வியாபார ரீதியாக செயல்படக்கூடாது. இது தொடர்பாக விளம்பரம், பிரசாரம், ஊக்கமளிப்பது, இப்படி எந்த வகையிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது.

வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் நோக்கம் பொதுநல அக்கறையோடு இருக்க வேண்டும். வாடகைத் தாயை நியமிக்க முடிவெடுக்கும் தம்பதி இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துபூர்வமான சான்றை, மாவட்ட மருத்துவக் குழுமத்தில் இருந்து பெற வேண்டும். இந்த மருத்துவக் குழுமத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். வாடகைத்தாயாக வருபவருக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர், பின்னர் என 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.

வாடகைத் தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தம்பதி, அவர்களின் நெருங்கிய உறவுகளை மட்டுமே வாடகை தாயாக அமர்த்திக்கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாதபோது, வாடகை தாயாக வருபவர், தன் கருமுட்டையையும் தானமாக கொடுப்பார்.

புதிய சட்ட மசோதாவின்படி, அந்த பெண் தனது கருமுட்டையை தானமாக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட தம்பதியின் கருமுட்டை, விந்தணு இணைந்த கருவை தனது கருப்பையில் வைத்து வளர்த்துக்கொடுத்தாலே போதும். ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகை தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். அத்தகைய சான்றிதழை, மேலே குறிப்பிட்டபடி தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்குவார்கள்.

அதேபோல் வாடகைத்தாயை நியமிக்கும் தம்பதிகளுக்கும் விதிமுறைகள் உள்ளன. வாடகைத் தாயை ஏற்பாடு செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும். தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவனின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக் கூடாது. தத்து குழந்தையோ, வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது. தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால், அவர்களுக்கு சொந்த குழந்தை இருந்தாலும் வாடகை தாயை நியமித்துக்கொள்ள முடியும்.

வாடகைத் தாயாக வருபவருக்கு பணம் கொடுக்கக் கூடாது. தம்பதிக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. திருமணமாகாத அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதியில்லை.
Tags:    

Similar News