ஆன்மிகம்
சுவாமிமலை முருகன்

கந்தசஷ்டி விழாவையொட்டி சுவாமிமலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றம்

Published On 2020-11-21 03:47 GMT   |   Update On 2020-11-21 03:47 GMT
சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
முருகனின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோவில் உள்பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Tags:    

Similar News