செய்திகள்
இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்

தாரமங்கலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து சேதம்- அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பினர்

Published On 2021-11-23 06:26 GMT   |   Update On 2021-11-23 06:26 GMT
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். உயிர்சேதம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் அருகே மாரிமுத்து முதலியார் என்பவருக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 மாடி கட்டிடம் உள்ளது. இது நீண்ட காலமாக பத்திர பதிவு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. பழமையான கட்டிடம் என்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதை கண்டு அக்கம்பக்கம் வசிப்பவர்கள் அலுவலகத்தையும் கட்டிடத்தையும் அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.

கடும் எதிர்ப்புக்கு பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திர பதிவு அலுவலகம் வேறு புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது பயன்பாடு இன்றி வந்த கட்டிடம் அக்கம் பக்கம் இருப்பவர்களை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக கட்டிடம் மேலும் வலுவிழந்து காணப்பட்டது.

இன்று காலை திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி மேலிருந்து முற்றிலுமாக சரிந்து அருகிலிருந்த சீனிவாசன் என்பவரின் ஓட்டு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் வீட்டில் குடியிருந்த சீனிவாசனின் தாயார் மற்றும் தம்பி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



வீடு இடிந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். உயிர்சேதம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். எனினும் இந்த சம்பவத்தால் அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு இடிந்து விழுந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் எஞ்சியுள்ள கட்டிட பகுதிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News