செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்

பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2021-09-08 11:05 GMT   |   Update On 2021-09-08 11:05 GMT
உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை:

உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு அரசாணை படி சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் உதயகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கடும் ஆட்சேபனைகளுக்கு இடையே அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர திட்டங்களுக்கு 100 சதவீதம் கருணைத் தொகை வழங்கிட வேண்டும். வீடு, போர்வேல், நிரந்தர கட்டுமானங்களுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்கிட வேண்டும். உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

அனைத்து வகையான இழப்பீடுகளையும் சட்டப்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் முழுமையாக செலுத்திய பின் வேலையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், சட்ட ஆலோசகர் அபிராமன், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரகலநாதன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News