ஆன்மிகம்
சட்ட தேரில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்.

சித்திரை திருவிழாவில் சட்ட தேரில் எழுந்தருளிய மீனாட்சி-சுந்தரேசுவரர்

Published On 2021-04-26 05:48 GMT   |   Update On 2021-04-26 05:48 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சட்ட தேரோட்டம் நடந்தது. சட்டத்தேரை இழுக்க பக்தர்கள் யாரும் இல்லாததால் கோவில் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆடி வீதிகளில் தேர்களை இழுத்து வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக உள்திருவிழாவாக பக்தர்கள் யாருமின்றி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நடந்தது.

விழாவில் 11-ம் நாள் தேர் திருவிழா நடைபெறும். அதனை காண மாசி வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்த நிலையில் தான் மீண்டும் கொரோனா காரணமாக திருவிழாக்கள் கோவிலுக்குள்ளே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரிய தேர் திருவிழா நடைபெறாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதே போன்று பெரிய அளவில் தேர் திருவிழாவை ஆடி வீதியில் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி புதிய சட்டத்தேர் செய்வதற்கான பணிகள் கடந்த 10 நாட்களாக புதுமண்டபத்தில் நடந்து வந்தன. அந்த பணிகள் முடிந்து தேர் திருவிழாவிற்கு தயாரானது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் புதிய தேரில் எழுந்தருளினார்கள். பின்னர் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சட்டத்தேரை இழுக்க பக்தர்கள் யாரும் இல்லாததால் கோவில் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆடி வீதிகளில் தேர்களை இழுத்து வந்தனர்.

அவர்கள் பக்தர்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பி உற்சாக தேர்களை இழுத்து நிலையை வந்து சேர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நேற்று கொரோனா முழு ஊரடங்கு விதிக்கப்பட்டால் பக்தர்கள் யாரையும் சித்திரை வீதிகளில் போலீசார் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அதை மீறி வந்த பக்தர்களையும் போலீசார் அங்கிருந்த விரட்டினர்.

விழாவில் இரவு தேர் தடம் பார்க்கும் நிகழ்வில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சப்தவர்ண சப்பரத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

அதை தொடர்ந்து சித்திரை திருவிழாவில் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

கோவில் பொற்றாமரைக்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News