செய்திகள்
மாணவிகள் மீட்பு

குற்றாலம் பெண்கள் விடுதியில் மாயமான 4 மாணவிகள் மதுரையில் மீட்பு

Published On 2019-11-13 05:41 GMT   |   Update On 2019-11-13 05:41 GMT
குற்றாலம் பெண்கள் விடுதியில் மாயமான 4 மாணவிகளை போலீசார் மதுரையில் மீட்டனர்.

நெல்லை:

குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பாலின் ரோஸ் ஜெமிமா (வயது47). இவர் அந்த பகுதியில் ஏழை மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி நடத்தி வருகிறார். அந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த குத்தா லிங்கம் மகள் மணிமேகலை (14), அம்பை வேலாயுதம் நகர் வில்லியம் மகள் மரிய லிவ்யா (15), கடையநல்லூரை சேர்ந்த மணி மகள் அபிநயா (16) ஆகியோரும் அங்கு தங்கியிருந்தனர். அவர்கள் 3 பேர் மற்றும் விடுதி நடத்தி வந்த கோவிந்தன் மகள் ஜெஸ்பா எஸ்தர் (12) ஆகிய 4 பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

அபிநயாவும், மரிய லிவ்யாவும் 11-ம் வகுப்பு படித்து வந்தனர். மணி மேகலை 10-ம் வகுப்பும், ஜெஸ்பா எஸ்தர் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த 4 மாணவிகளும் நன்றாக படிக்காமல் அடிக்கடி விளையாடி வந்ததால், விடுதி கண்காணிப்பாளர் பாலின் ரோஸ் ஜெமிமா மாணவிகளை கண்டித்துள்ளார். மேலும் தனது மகள் ஜெஸ்பா எஸ்தருடன் பழக கூடாது என்றும் சத்தம் போட்டுள்ளார்.

இது தோழிகளாக பழகிய 4 மாணவிகளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த 4 மாணவிகளும் ஒன்றாக விடுதியை விட்டு வெளியேறி மாயமானார்கள். வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமான விபரம் தெரியவந்தது.

உடனடியாக விடுதி மேற்பார்வையாளர் பாலின் ரோஸ் ஜெமிமா அந்த பகுதியில் மாணவிகளை தேடினார். மாணவிகள் படிக்கும் பள்ளிக்கு சென்றும் அவர்களை தேடினார்கள். ஆனால் எங்கும் மாணவிகளை காணவில்லை. இதுகுறித்து பாலின் ரோஸ் ஜெமிமா குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவிகளையும் தேடி வந்தனர்.

4 மாணவிகள் மாயமானது குறித்து தகவலறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்றுஅங்கு தங்கியுள்ள மற்ற மாணவிகள் மற்றும் ஊழியர்களிடம் காணாமல் போன மாணவிகள் குறித்து விசாரணை நடத்தினார்.

மாயமான 4 மாணவிகளின் புகைப்படங்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் மாயமான மாணவிகளை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில் நேற்று மாயமான மாணவிகள் மதுரை யானைக்கால் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். அப்பகுதி பொது மக்கள் நீங்கள் யார் எந்த ஊர் என விசாரித்துள்ளார்கள்.

அப்போது அவர்கள் நாங்கள் குற்றாலம் காப்பகத்தில் தங்கி படிப்பதாகவும் தற்போது அங்கிருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த பொதுமக்கள் உடனடியாக காப்பகத்திற்கு மாயமான மாணவிகள் இங்கு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். காப்பகத்தினர் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று நேற்றிரவு மாயமான மாணவிகளை மீட்டனர்.

Tags:    

Similar News