செய்திகள்
புகார்

கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை- கடனை வசூலிக்க வீட்டுக்கு சென்றதால் போலீசாரை விட்டு தாக்கிய தொழிலதிபர்

Published On 2021-02-19 10:46 GMT   |   Update On 2021-02-19 10:46 GMT
திருச்சியில் கடனை வசூலிக்க வீட்டுக்கு சென்ற பகுதிநேர வேலை பார்க்கும் கல்லூரி மாணவரை, தொழிலதிபர் போலீசாரை விட்டு தாக்கியதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மன்னார்புரம் காஜாமலை காலனி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வணங்காமுடி (வயது 21). இந்த இளைஞர் கரூரில் வணிகவரித்துறை அதிகாரியாக இருக்கும் தனது தாயாருடன் வந்து திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் தற்போது திருச்சி ஈ.வி.ஆர். கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். கொரோனாவால் கல்லூரி மூடப்பட்ட நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தேன். அந்த நிறுவனத்தில் விற்பனை மற்றும் வசூல் பிரிவில் பணியாற்றி வந்தேன்.

இந்தநிலையில் துவாக்குடியில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு எங்கள் நிறுவன பொருள் சப்ளை செய்யப்பட்டது. அந்த வகையில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 536 பாக்கி தொகை இருந்தது. இந்த தொகையை வசூலிக்க முடியாததால் எனது சம்பளம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து திருச்சி மன்னார்புரம் கண்ணப்பா ஹோட்டல் பகுதியிலுள்ள அந்த நிறுவன முதலாளியின் வீட்டிற்கு பாக்கி தொகையை கேட்டு சென்றேன். அப்போது திடீரென அங்கு ஒரு போலீஸ் ஜீப் வந்தது. அதில் இருந்து இறங்கிய போலீசார் என்னை ஜீப்பில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினர். ஏறியவுடன் 2 போலீசார் என்னை காலால் எட்டி உதைத்தனர்.

என்னுடன் வந்த நண்பரையும் போலீசார் தாக்கினார்கள். பின்னர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் எனது கைரேகை மற்றும் கையொப்பம் வாங்கி கொண்டனர்.

இனி பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றால் உன்னை தொலைத்து விடுவேன் என்று மிரட்டினர். நான் ஏற்கனவே போலீஸ் நண்பர்கள் குழுவிலும் பணியாற்றி இருக்கிறேன். நிலுவைத் தொகை பணத்தை வசூல் செய்ய சென்ற என்னை அடித்து உதைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுபற்றி அந்த மாணவர் கூறும்போது, கமி‌ஷனர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
Tags:    

Similar News