செய்திகள்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி ஆம்புலன்சில் பெண் கடத்தல்

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி ஆம்புலன்சில் பெண் கடத்தல்

Published On 2020-09-10 03:07 GMT   |   Update On 2020-09-10 03:07 GMT
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி ஆம்புலன்சில் பெண் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு :

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். பொம்மனஹள்ளி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகஅளவில் உள்ளதால், அங்கு வீடு, வீடாக சென்று மாநகராட்சி சார்பில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 3-ந் தேதி முழுகவச உடைகளை அணிந்து கொண்டு மாநகராட்சியில் இருந்து வந்திருப்பதாக கூறி, 4 பேர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்திருந்தனர். அன்றைய தினமே அந்த பெண்ணுக்கு, குடும்பத்தில் சிலருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், மறுநாள் 28 வயது பெண்ணின் வீட்டுக்கு ஆம்புலன்சில் 2 பேர் வந்திருந்தனர். முழுகவச உடைகளுடன் இருந்த அவர்கள், பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். அதைதொடர்ந்து அவரது குடும்பத்தினர், பெண்ணை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு கொரோனாவுக்காக சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக டிரைவர் உள்பட 2 பேர், குடும்பத்தினரிடம் கூறி இருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் செல்போனை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் செல்போனை எடுத்து செல்லவில்லை.

அதைத்தொடர்ந்து, மறுநாள் அந்த தனியார் மருத்துவமனைக்கு, பெண்ணின் உடல் நிலை குறித்து விசாரிக்க கணவர் சென்றுள்ளார். ஆனால் கடந்த 4 நாட்களாக பொம்மனஹள்ளியில் இருந்து எந்த ஒரு பெண்ணும், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி விட்டனர். மாநகராட்சி சார்பில் பொம்மனஹள்ளியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனையும் நடத்தப்படவில்லை, பொம்மனஹள்ளியில் கொரோனா பாதித்தவர்களை தங்களது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி மாநகராட்சியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதைகேட்டு பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். வேறு சில மருத்துவமனைகள், ஆஸ்பத்திரிகளில் விசாரித்த போதும், அந்த பெண் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண் எங்கு சென்றார்?, அவரை ஆம்புலன்சில் அழைத்து சென்ற நபர்கள் யார்?, உண்மையில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி மர்மநபர்கள், அந்த பெண்ணை கடத்திச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து பெண்ணின் கணவர், பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அந்த பெண்ணை தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி பொம்மனஹள்ளி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொம்மனஹள்ளியில் மாநகராட்சி சார்பில் வீடு, வீடாக சோதனை நடத்தப்படவில்லை. மாநகராட்சி சார்பில் கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்சில் அழைத்து சென்றால், சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஆம்புலன்ஸ் டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறுந்தகவலில் இடம் பெற்றிருக்கும்.

ஆம்புலன்ஸ் டிரைவர் அல்லது மாநகராட்சி ஊழியர்கள், கொரோனா பாதித்த பெண்ணையும், ஆம்புலன்சையும் புகைப்படம் பிடித்து அனுப்பி வைப்பார்கள். அதுபோன்ற எந்த ஒரு புகைப்படமும் வரவில்லை. போலீசார் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் பெண் காணாமல் போனது குறித்து விசாரிக்கப்படும். அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

இந்த விவகாரம் பெங்களூருவில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News