செய்திகள்
பாஜக-சிவசேனா

புதிய ஆட்சி அமைப்பது யார்?- மகாராஷ்டிராவில் குழப்பம் நீடிப்பு

Published On 2019-11-06 07:33 GMT   |   Update On 2019-11-06 07:33 GMT
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் ஆட்சி அமைத்து விட்டு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மை பலம் கிடைத்தும் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்காமல் மோதலில் ஈடுபட்டுள்ளன.

மொத்தம் உள்ள 288 இடங்களில் மெஜாரிட்டிக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த கூட்டணிக்கு 161 இடங்கள் கிடைத்துள்ளன.

பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிவசேனா முதல்- மந்திரி பதவியை தனக்கு தர வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக உள்ளது. அமைச்சரவையில் முக்கியமான இலாக்காக்கள் அனைத்தையும் தந்து விடுவதாக பாரதிய ஜனதா சமரசம் செய்தும் சிவசேனா கட்சி தலைவர்கள் தங்களுக்கு முதல்-மந்திரி பதவியை தந்தே தீர வேண்டும் என்று பேரம் பேசி வருகிறார்கள்.

பாரதிய ஜனதா இதற்கு சம்மதிக்காததால் 54 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள தேசியவாத காங்கிரசையும், 44 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரசையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால் அதற்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவதில் கடந்த இரண்டு வாரமாக இழுபறி நீடித்தபடி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற 9-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே இன்னும் இரண்டு நாட்களில் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இல்லையெனில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் கவர்னருக்கு ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோசியாரி பா.ஜ.க. தலைவர்களையும், சிவசேனா தலைவர்களையும் அழைத்து பேசினார். என்றாலும் இன்னமும் பாரதிய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் இன்று வரை குழப்பம் நீடித்த படி உள்ளது.

முதல்-மந்திரி பதவியில் விடாபிடியாக இருக்கும் சிவசேனாவை சமரசம் செய்வதற்காக பா.ஜ.க. தலைவர்கள் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் விவாதித்தனர்.

அப்போது மத்திய மந்திரி நிதின்கட்காரியை தூதராக சிவசேனா தலைவர்களுடன் பேச வைத்து சமரசம் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. நிதின்கட்காரிக்கு சிவசேனா தலைவர்களில் பலர் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். எனவே நிதின்கட்காரி நினைத்தால் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிவசேனாவை சமரசம் செய்யும் முயற்சிகள் பா.ஜ.க. தரப்பில் இருந்து தீவிரமாகி உள்ளன. ஆனால் சிவசேனா கடைசி வரை முதல்-மந்திரி பதவிக்காக போராடுவது என்பதில் உறுதியாக உள்ளது. அதற்காக எந்த எல்லைக்கு செல்லவும் அந்த கட்சி தலைவர்கள் பிடிவாதமான மனநிலையில் உள்ளனர்.

கவர்னரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அந்த கட்சி ஆட்சி அமைக்காவிட்டால் இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் சிவசேனாவுக்கு அந்த வாய்ப்பை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் தங்கள் தலைமையில் ஆட்சி அமைத்து விடலாம் என்று சிவசேனா மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


ஆனால் சரத்பவாரும், சோனியாவும் சிவசேனாவுக்கு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி வெளியில் வந்தால் மட்டுமே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று தெளிவுபட கூறி உள்ளனர். இதனால் சிவசேனா தனது முடிவை மாற்றிக் கொள்ளுமா? என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவும் சற்று இறங்கி வந்து பேச தொடங்கி இருப்பதால் சிவசேனா தனது பிடிவாதத்தை கைவிட்டு தீர்வு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்- மந்திரி பதவி வி‌ஷயத்தில் மட்டுமே இன்னமும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. மற்ற அனைத்து பிரச்சனைகளிலும் தீர்வை எட்ட முடியும் என்ற நிலையில் உள்ளன. பாரதிய ஜனதா நேற்று சிவசேனாவுக்கு பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

அதை ஏற்று சிவசேனா பேச்சுவார்த்தை நடத்த முன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் சிவசேனா முன்வரவில்லை.

இதையடுத்து ஓரிரு நாட் களில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியை பாரதிய ஜனதா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “எங்களால் சிவசேனா ஆதரவு இல்லாமலேயே பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை நடத்த முடியும். ஆனால் சிவசேனாவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை” என்று கூறினார்.

பட்னாவிஸ் தலைமையில் ஓரிரு நாட்களில் பதவி ஏற்று விட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கு மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோசியாரி ஒத்துழைப்பு வழங்குவார் என்று தெரிகிறது.

ஒருவேளை இந்த ஓரிரு நாட்களில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முன் வராவிட்டால் குறுகிய காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதாவின் முடிவை பொறுத்து இந்த நடவடிக்கை அமையும். தற்போது நிதின் கட்காரி சிவசேனா தலைவர்களுடன் பேச தொடங்கி உள்ளார்.

அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தால் பாரதிய ஜனதா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்க உள்ளது.

அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. ஆட்சி அமைத்து விட்டு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே சிவசேனாவை சமரசம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tags:    

Similar News