செய்திகள்
கைது

கேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது

Published On 2021-01-27 10:27 GMT   |   Update On 2021-01-27 10:27 GMT
கேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே வனப்பகுதியில் கல்லாறு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகளின் நடமாட்டமும் உள்ளது.

இந்த நிலையில் கல்லாறு ஆற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று இறந்துகிடந்தது. அப்போது யானையின் 1½ வயதான குட்டி யானை தாய் யானையை கண்ணீர் மல்க சுற்றி சுற்றி வந்தது. இந்த காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது. இது வன ஆர்வலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரிகள் அந்த யானை நோய் காரணமாக இறந்திருக்கலாம் என கருதினர்.

இந்த நிலையில் காட்டு யானை மின்சார வேலியில் சிக்கி இறந்தது வனஅதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பாலோடு வனத்துறை அதிகாரிகள், ரப்பர் எஸ்டேட் அதிபர் ராஜேஷ் (வயது45) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ரப்பர் தோட்டத்தில் காட்டு யானை நுழைவதை தடுப்பதற்காக மின்சார வேலி அமைத்ததும் அதில் சிக்கி யானை பலியானதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது திட்டமிட்டு யானையை கொன்றதாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News