செய்திகள்
வானதி சீனிவாசன்

ராஜீவ் குறித்து சீமானின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது- வானதி சீனிவாசன் பேட்டி

Published On 2019-10-18 09:55 GMT   |   Update On 2019-10-18 09:55 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தும்படி சீமான் பேசியதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பழனி:

பழனியல் பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மாகாந்தியின் அடிப்படை கொள்கைகளான தீண்டாமை ஒழிப்பு, நீர்மேலாண்மை, இயற்கை விவசாயம், பெண்கல்வி, சுதேசி பொருளாதாரம் ஆகியவவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு காந்தியின் கொள்கைகளை முற்றிலுமாக நிறைவேற்றி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் சீன அதிபரோடு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் வேட்டி-சட்டையில் கலந்து கொண்டது தமிழகத்தின் கலாசாரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தும்படி சீமான் பேசியதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை ஜனநாயக ரீதியாக அரசியல் கட்சி நடத்துபவர் ஆதரிக்கிறார் என்றால், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


மேலும் ராஜீவ்காந்தி கொலையை அரசியல் லாபத்துக்காக யார் பயன்படுத்த நினைத்தாலும், சட்ட ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுயநலத்துக்கு அல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு அரசியல் கட்சி நடத்தி தேர்தலை சந்தித்து வரும் சீமான் இப்படி பேசியது அவர் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் தவறாக வழிநடத்த நினைக்கிறார்.

தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. மாநில தலைவர் நியமிக்கப்படுவார். தனிநபரை சார்ந்து எங்கள் கட்சி இயங்கவில்லை. எங்களுக்கென்று அமைப்பு ரீதியாக தலைமை உள்ளது. அதன்வழியில் கட்சி செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News