ஆன்மிகம்
7 ஊர் அம்மன்களை காணலாம்.

சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஏழூர் அம்மன் சப்பர திருவிழா

Published On 2020-11-06 06:43 GMT   |   Update On 2020-11-06 06:43 GMT
சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முத்தாலம்மன் கோவில் சப்பர திருவிழா 7 கிராமத்தினர் சார்பில் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சுற்றியுள்ள 7 கிராமத்தினர் சார்பில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் முத்தாலம்மன் கோவில் சப்பர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா முத்தாலம்மன் கோவில் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவின் வரலாறு சுவாரசியமானது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நவாபுகளின் படையெடுப்பு காரணமாக ஒரு மூதாட்டி தனது 6 பெண் குழந்தைகளுடன் தெற்கு நோக்கி வந்துள்ளார். அவர் டி.கல்லுப்பட்டி வந்தபோது பசியின் காரணமாக ஊர்த்தலைவர் ராயரை குழந்தைகளுடன் பார்த்துள்ளார். அவர் அவர்களுக்கு உணவு அளித்துள்ளார். மேலும் தங்களுக்கு அசைவ உணவு வேண்டும் என்று அவர்கள் கேட்டதற்கு ராயர் மற்றொரு ஊர் தலைவர் நாயக்கர் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

நாயக்கரும் அவர்களுக்கு அசைவ உணவு கொடுத்துள்ளார். பின்னர் தங்க இடமும் கொடுத்தார். இந்த 7 பேரும் இப்பகுதிக்கு வந்த பின்னர்தான் டி.கல்லுப்பட்டியை சுற்றி நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்து உள்ளது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் இவர்களை அன்போடு கவனித்து வந்தனர். பின்னர் வளர்ந்த அந்த 6 பெண்களுக்கும், திருமணம் செய்து வைக்க முயன்றபோது, அந்த பெண்கள் நாங்கள் தெய்வ குழந்தைகள், நாங்கள் மறையும் நேரம் வந்துவிட்டது என்றும், நாங்கள் தீயில் மடிந்த உடன் எங்களது சாம்பலை எடுத்து கிராமங்களில் தூவினால் நோய்நொடி மறையும் என்று கூறினர். பின்னர் ஆதிபராசக்தியின் வடிவமாகி விடுவோம் என்று கூறி அவர்கள் மறைந்து விட்டனர்.

இதன்படி தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும், டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதியாகவும், வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமியாகவும், வி.அம்மாபட்டியில் பைரவியாகவும், காடனேரியில் திரிபுரசுந்தரியாகவும், கிளான்குளத்தில் சபரியாகவும், கே.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாகவும் இந்த பெண்களை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கிராமங்களை இணைத்து, முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கடந்த ஒரு வாரம் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மாபட்டியை தவிர்த்து பிற 6 கிராமத்தினரும் தங்களுடைய சப்பரங்களை தலைசுமையாகவே 2 கிலோ மீட்டர் தூக்கி வந்து அம்மாபட்டி கிராமத்தை அடைந்தனர். அம்மாபட்டி கிராமத்தில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் 6 கிராமத்தினரும் தங்கள் அம்மன்களை பெற்றுக் கொண்டு அவரவர் கிராமத்திற்கு திரும்பினார்கள். பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர் வடம்பிடித்து அல்லது சக்கரங்கள் உதவியுடன் கொண்டு வருவார்கள். ஆனால் இப்பகுதியில் மட்டுமே கிராம மக்கள் சப்பரங்களை தங்கள் தலைச்சுமையாகவே தூக்கி வருவது சிறப்பாகும். பின்னர் மாவிளக்கு பூஜை, முளைப்பாரி மற்றும் அம்மனுக்கு பூஜை நடைபெற்றது.

பல்வேறு சமூகத்தினர் ஒன்று கூடியும், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டும் தங்கள் ஒற்றுமையை இந்த திருவிழாவின் மூலம் வெளிப்படுத்தினார்கள். திருவிழாவையொட்டி மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் 350 போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை 7 கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர். 600 வருடங்களாக சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் திருவிழாவாக இந்த விழா நடந்து வருகிறது.
Tags:    

Similar News