செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- தப்பி ஓடிய தரகரை பிடிக்க வேட்டை

Published On 2019-10-03 09:20 GMT   |   Update On 2019-10-03 09:20 GMT
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய உதவிய தரகரை பிடிக்க போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
தேனி:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் ஆகிய 3 பேரும் அவர்களது தந்தைகளான வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இர்பான் சேலத்தில் சரணடைந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மருத்துவமனை நடத்தி வந்த அவரது தந்தை முகமது சபி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கடந்த சில நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் போலி டாக்டர் என தெரியவந்தது. இதனையடுத்து அவர் நேற்று தேனி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உதித் சூர்யா, ராகுல், பிரவீன் மற்றும் அவர்களின் பெற்றோர் முகமது சபி மூலமே புரோக்கர்களுக்கு பழக்கமாகியுள்ளனர். முகமது சபி ஆந்திர மாநிலம் பிஜப்பூரில் உள்ள அல் அமீன் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்து 3 ஆண்டுகள் மட்டுமே படித்துள்ளார். அதன் பின்னர் திருப்பத்தூரிலும், வாணியம்பாடியிலும் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.

தனது ஆஸ்பத்திரியில் பதிவு பெற்ற மருத்துவர் என போர்டு வைத்திருந்தார். மேலும் மருந்து கடையும் நடத்தி வந்துள்ளார். சிறப்பு மருத்துவர்களும் இவரது ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இவரது முதல் மகன் எம்.பி.பி.எஸ். முடித்து தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். 2-வது மகன் இர்பான் மொரிசீயஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளார்.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் பணிபுரிய தனித்தேர்வு எழுத வேண்டும். இதனால் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்துள்ளார். இதற்காக தான் படித்த மொரிசீயஸ் கல்லூரியில் சில தவறான தகவல்களை கூறி கல்விச் சான்றிதழ்களை வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

முகமது சபிக்கு வாணியம்பாடியிலும், திருப்பத்தூரிலும் ஒரு வீடு உள்ளது. திருப்பத்தூரில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.

இவர் தனக்கு தெரிந்த ஜெயராமன் என்பவரை முகமது சபியிடம் அறிமுகம் செய்துள்ளார். இவரே நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய மாணவர்களை ஏற்பாடு செய்த வேதாச்சலம், முகமது ரசீத் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர்களது செல்போன் எண்களை வாங்கிய முகமது சபி தனது மகனுக்கு பதில் நீட் தேர்வில் வேறு மாணவனை வைத்து தேர்வு எழுத வைக்குமாறு கூறியுள்ளார். ஜெயராமனும், வேதாச்சலமும் அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.



தற்போது இவர்களது செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது.

முகமது ரஷீத் முக்கிய புள்ளியாக இருந்து பல்வேறு நபர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத வைத்துள்ளார். இதற்காக பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது. தற்போது அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவரை பிடிக்க விரைந்துள்ளனர். புரோக்கர் கோவிந்தராஜ் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் பல மாணவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தின் மூலம் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உடல் அடையாளங்கள், சான்றிதழ்களும் மறு ஆய்வு செய்யப்பட உள்ளன. இது குறித்து அனைத்து கல்லூரிகளுக்கும் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களை அழைத்து சான்றிதழ்களை ஒப்பிட்டு சரிபார்க்குமாறு நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News