செய்திகள்
ராமதாஸ்

போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-07-09 07:35 GMT   |   Update On 2021-07-09 07:35 GMT
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆளுங்கட்சி ஆதிக்கம் அதிகரிப்பது வாடிக்கையானதுதான் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அனைத்துக் கோட்டங்களிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவது உள்ளிட்ட பல வழிகளில் பழிவாங்கப்படுகிறார்கள். அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய நிர்வாகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆளுங்கட்சி ஆதிக்கம் அதிகரிப்பது வாடிக்கையானது தான்.

ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு பணிவாய்ப்பு மறுக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் சார்பு நிலை கொண்டவையாக இருக்கலாம். ஆனால், அரசாங்கம் அனைவருக்கும் பொதுவானது. போக்குவரத்துக் கழகங்களும் அனைவருக்கும் பொதுவானவை.

அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் தான் போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்கு உழைப்பவர்கள். அவர்களிடம் அரசியல் ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டால் அது போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்காது.

இது ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வீழ்ச்சிப் பாதையில் தான் இழுத்துச் செல்லும். இதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அனைத்துப் பணியாளர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும்; அவர்களை பழி வாங்காமல் அவர்களின் பணியை அமைதியாகவும், நிம்மதியாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களும், போக்குவரத்துக் கழகங்களும் வளர வகை செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News