செய்திகள்
கங்கனா ரனாவத், அனில் தேஷ்முக்

மும்பையை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு வழங்குவதா?: மகாராஷ்டிரா மந்திரிகள் எதிர்ப்பு

Published On 2020-09-08 03:48 GMT   |   Update On 2020-09-08 03:48 GMT
மும்பையை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு மகாராஷ்டிரா மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மும்பை :

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா ரணாவத்தை ஆளும் சிவசேனா மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி இருப்பதற்கு மகாராஷ்டிரா மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:-

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இது மும்பை மற்றும் மராட்டிய மக்களை புண்படுத்துவதாகும். மராட்டியம் பா.ஜனதா உள்பட அனைவருக்கும் சொந்தமானது. எனவே பா.ஜனதா உள்ளிட்ட அனைவரும் கங்கனாவின் கருத்தை கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசை சேர்ந்த மந்திரி விஜய் வடேடிவார் கூறுகையில், “கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு சார்பில் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பது அரசியல் நோக்கம் கொண்டது. கங்கனா பா.ஜனதாவின் பற்றாளராக இருக்கிறார். பாதுகாப்பு வழங்கப்பட்டதன் மூலம் மும்பை நகரையும், மும்பை போலீசாரையும் கங்கனா விமர்சித்ததை மத்திய அரசு மற்றும் பா.ஜனதா ஆமோதித்து உள்ளது. இது மராட்டிய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” என்றார்.

மந்திரிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்து கூறிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கங்கனாவுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் அவரது கருத்துக்கு பா.ஜனதா ஆதரவு அளித்ததாக கருதக்கூடாது. பாதுகாப்பு வழங்குவது அரசுக்கு இருக்கும் பொறுப்பு” என்றார்.
Tags:    

Similar News