ஆன்மிகம்
கீழப்பெரும்பள்ளம் கோவிலில், கேது பெயர்ச்சி விழாவையொட்டி கேது பகவானுக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

Published On 2020-09-02 07:58 GMT   |   Update On 2020-09-02 07:58 GMT
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலமான நாகநாதசாமி கோவில் உள்ளது. ராகுபகவான், சிவபெருமானை பூஜித்த தலமான இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இருதேவியருடன் எழுந்தளியுள்ளார். இத்தலத்தில் உள்ள ராகு பகவானின் மேனியில்(உடம்பில்) பாலாபிஷேகம் செய்யும்போது பாலானது, நீலநிறமாக மாறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ராகு பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறும். நேற்று மதியம் 2.16 மணிக்கு ராகுபகவான், மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி இந்த கோவிலில் கடந்த 30-ந் தேதி மாலையில் முதல் கால யாகபூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தன.

நேற்று காலை 10 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று மதியம் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தன அபிஷேகத்தை தொடர்ந்து யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நாககன்னி நாகவள்ளி உடனாய ராகு பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை உமாபதி, சங்கர், சரவணன், ஸ்ரீதரன், செல்லப்பா, ராஜேஷ் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

விழாவில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள கீழப்பெரும்பள்ளத்தில் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோவில் உள்ளது. கேது பகவான் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலில் சவுந்தரநாயகி அம்மனுடன் நாகநாதர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ள இந்த கோவிலில் கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. கேதுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி பெயர்ச்சி அடைவதே கேது பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. நேற்று மதியம் 2.16 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவிலில் நேற்று காலை சிறப்பு யாகம், தீபாராதனை நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய யாக குடங்கள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது.

முன்னதாக கேது பகவானுக்கு பால், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகமும், பின்னர் மலர் அலங்காரமும் செய்யபட்டு மதியம் 2.16 மணிக்கு தீபாராதனை நடந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குறைந்த அளவே பக்தர்களை கொண்டு கேது பெயர்ச்சி வழிபாடு நடந்தது.

கேது பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் வாசலில் முக கவசம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News