செய்திகள்
பல்லடம் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியை அனைத்து தேர்தலுக்கும் பயன்படுத்த வேண்டும்-பல்லடம் தாசில்தாரிடம் மனு

Published On 2021-11-25 08:08 GMT   |   Update On 2021-11-25 08:08 GMT
பல வருடங்களாக சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது.
பல்லடம்:

பல்லடத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் பயன்படும் வாக்குச்சாவடியை அனைத்து தேர்தலுக்கும் பயன்படுத்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் சட்டமன்ற தொகுதி(115), பொங்கலூர் ஒன்றியம், பொங்கலூர் ஊராட்சி வார்டு எண்-3ல் இடம் பெற்றுள்ள தேவணம்பாளையம் (காந்திநகர், காட்டுப்பாளையம் உள்ளடக்கிய) கிராமத்தில் சுமார் 1100 வாக்காளர்கள் உள்ளோம். 

இங்கு உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்கு சாவடி மையமாக செயல்படுகிறது. ஆனால் பல வருடங்களாக சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் சிரமமாக உள்ளது. மேலும் வாக்குபதிவு சதவீதமும் குறைகிறது. வாக்காளர் விவரங்கள் திருத்தும் முகாம்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் சட்டமன்ற தேர்தல் வாக்கு சாவடியாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. 

இதனால் சுமார் 1200-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் வாக்காளர் திருத்தல் முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமும் இதுவரை நடைபெறுவதில்லை. எனவே வாக்குசாவடி மையமாக செயல்பட முழு தகுதியுள்ள இந்த மையத்தை தற்போதே வாக்குசாவடி மையமாக அறிவித்து இனி வரும் அனைத்து வகை தேர்தலிலும் வாக்கு சாவடி மையமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News