செய்திகள்
ராகுல் காந்தி

தடுப்பூசிக்கு மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் - ராகுல் காந்தி கிண்டல்

Published On 2021-06-06 20:32 GMT   |   Update On 2021-06-06 20:32 GMT
மத்திய அரசு நீல நிற ‘டிக்’குக்காகத்தான் போராடுவதாகவும், தடுப்பூசியை மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு நீல நிற ‘டிக்’குக்காகத்தான் போராடுவதாகவும், தடுப்பூசியை மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், பிரபலங்களை அடையாளப்படுத்த பயன்படுத்தி வரும் நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது.

இதனால் சமூக வலைத்தள வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக டுவிட்டர் நிறுவனத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அது குறித்து எடுத்துரைத்தனர்.



இதைத்தொடர்ந்து வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் அந்த சரிபார்க்கப்பட்ட பேட்ஜ் (நீல நிற டிக்) மீண்டும் இணைக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவத்தை மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்துடன் தொடர்புபடுத்தி ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காததையும், அரசின் தடுப்பூசி கொள்கையையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘நீல நிற டிக்குக்காகத்தான் மோடி அரசு போராடுகிறது. உங்களுக்கு (மக்கள்) தடுப்பூசி வேண்டுமென்றால் நீங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான்’ என குறிப்பிட்டு இருந்தார். இதற்காக ‘முன்னுரிமை’ என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தி இருந்தார்.

அதேநேரம் ராகுல் காந்தியின் இந்த கிண்டலுக்கு பா.ஜனதாவும் பதிலடி கொடுத்து உள்ளது. ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தை விட்டு களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் எனவும், தடுப்பூசி திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் முதல்-மந்திரிகளை கேட்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘டுவிட்டரில் அரசியல் செய்வது அவரின் (ராகுல் காந்தி) மிக முக்கியமான செயல்பாடும், தளமும் ஆகும். இவ்வளவு பெரிய தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், ஏழைகளுக்கு இலவச ரேஷனை வழங்குவதிலும் மோடி அரசு பாராட்டத்தக்க வேலையைச் செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News