ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2020-01-08 06:18 GMT   |   Update On 2020-01-08 06:18 GMT
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக தேரோடும் நான்கு வீதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தேர்களை அலங்கரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலின் கீழசன்னதி அருகே பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேர்களை சுத்தம் செய்து அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேரோட்டம் முடிந்ததும் மறுநாள் 10-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், மதியம் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 11-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News