செய்திகள்
திமுக

திமுக 75 தொகுதிகளில் தோற்றதற்கான காரணம் என்ன?- கட்சி நிர்வாகிகளிடம் சிறப்பு குழு விசாரணை

Published On 2021-07-18 09:48 GMT   |   Update On 2021-07-18 09:48 GMT
10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் அ.தி.மு.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் தி.மு.க.வுக்கு அங்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது.
சென்னை:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றியது. 75 தொகுதிகளில் வெற்றியை இழந்தது.

10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் அ.தி.மு.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் தி.மு.க.வுக்கு அங்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது.



கோவை, தர்மபுரியில் உள்ள 15 தொகுதிகளை முழுமையாகவும், சேலத்தில் 11-ல் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியதால் தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்தது.

வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தி.மு.க. கணிசமான வெற்றியை பெற்றாலும் திண்டுக்கல்லில் 3, மதுரையில் 5 தொகுதிகளை இழந்தது.

கோவை, தர்மபுரிக்கு அடுத்தபடியாக மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வில் உள்ள 3 தொகுதிகளையும் தி.மு.க. முழுமையாக இழந்தது.

தி.மு.க. இழந்த 75 தொகுதிகளில் தோல்விக்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக 15 பேர் கொண்ட சிறப்பு குழு தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தோல்வி அடைந்த ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் வீதம் சென்று விசாரிக்கின்றனர்.

இதில் தி.மு.க. தோல்விக்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்று வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் புகார் அளித்துள்ளனர். சில இடங்களில் மாவட்ட செயலாளர்களே வெற்றிக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என்று புகார்கள் வந்துள்ளது.‘சில வேட்பாளர்கள் பணம் சரிவர செலவழிக்கவில்லை என்றும், புகார்கள் தலைமைக்கு வந்துள்ளன.

இதில் எது உண்மை என்று விசாரித்து அறிக்கை அளிக்க ‘சிறப்பு குழு’ களம் இறக்கப்பட்டுள்ளது. வட்டச் செயலாளர்கள், ஒன்றிய நகர செயலாளர்கள், அதிருப்தி கோஷ்டியினர் என இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.

உள்ளடி வேலையால் எந்தெந்த தொகுதியில் வெற்றி கிடைக்காமல் போனது என்பது பற்றியும் சிறப்புக்குழு விசாரித்து வருகிறது.

இதுகுறித்து தி.மு.க.நிர்வாகிகள் கூறுகையில், அதிருப்தி நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களிடமும் இந்த குழு விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தோல்விக்கான முழு காரணமும் தெரியவரும். யார்? யார் தவறு செய்துள்ளார்கள் என்பது தலைமைக்கு தெரிந்தால் தான் எதிர் வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாவண்ணம் தடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News