கோவில்கள்
ஆலத்தூர் காருடைய அய்யனார்- வீரனார் கோவில்

வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆலத்தூர் காருடைய அய்யனார்- வீரனார் கோவில்

Published On 2022-02-12 01:43 GMT   |   Update On 2022-02-12 01:43 GMT
ஆலத்தூரையும் அதனை சுற்றியுள்ள மக்களுடனும் இரண்டற கலந்த காவல் தெய்வமாக இக்கோவில் அய்யனாரும், வீரனாரும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் கிராமம் பட்டுக்கோட்டையில் இருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ள அழகிய பாரம்பரியம் மாறாத கிராமம். ஆலத்தூர் என்றாலே அனைவருக்கும் தெரிந்த ஒரே பெயர் காருடைய அய்யனார்- வீரனார் ஆலயம் தான்.

ஆலத்தூரையும் அதனை சுற்றியுள்ள மக்களுடனும் இரண்டற கலந்த காவல் தெய்வமாக இக்கோவில் அய்யனாரும், வீரனாரும் அருள்பாலிக்கிறார்கள்.

இந்த கோவிலில் காருடைய அய்யனார் மூலவராக வீற்றிருக்க அடுத்து வீரனாரும் பரிவார தெய்வங்களாக நொண்டிவீரன், முன்னோடியன், மாப்பிள்ளைவீரன், அகோரவீரப்பத்திரன், விசாலாட்சி அம்மன், காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு வீற்றிருக்கின்றார்கள். இக்கோவிலில் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் ஒரு வேளை உச்சிகால அபிஷேகம், மற்றும் படையல்கள் நடைபெறும்.

வேண்டுதல் நிைறவேற நடக்கும் நிகழ்ச்சிகளே இங்கு ஒரு பெரும் திருவிழா போன்றே நடக்கும். இதனால் வாரத்தில் 3 நாட்களும் இக்கோவில் திருவிழா போல காட்சியளிக்கும்.

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வங்களாக அய்யனாரும், வீரனாரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். மக்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப குதிரை உபயம், படித்துரை உபயம், அன்னதான உபயம் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்கிறார்கள். பொருளதார மேம்பாடு அடைய, குழந்தை பாக்கியம் பெற, குடும்ப பிரச்சினை சுமுமாக தீர வேண்டி இங்கு மக்கள் வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிய தலமாக இக்கோவில் உள்ளது.

சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று இங்கு வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. அன்று காவடி எடுத்தல் விழா நடைபெறும். விழாவின் 2-வது நாளில் காலபைரவருக்கு அக்னி கொப்பரை எடுத்தல் விழா நடைபெறும்.

இறுதி நாளில் தேர் திருவிழா நடைபெறும். தேர் புறப்படும் முன்பாக செம்மறி ஆடு தேருக்கு பலியிடப்படுகிறது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் தற்போது ஆலத்தூர் மற்றும் ஏனைய கிராம மக்களின் உதவியுடனும், வெளிநாடு வாழ் மக்களின் உதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடக்கிறது.

இந்த கோவிலில் 1939-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 1979-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பின் 43 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காருடைய அய்யனார்-வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 6-ந் தேதி காலை விநாயகர் வழிபாடும் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 7-ந்தேதி காலை சாந்தி ஹோமம், மாலை கிராம சாந்தியும் நடைபெற்றது. 8-ந்தேதி காலை மூர்த்தி ஹோமம், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

9-ந்தேதி காலை 2-ம் கால யாக பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று 5-ம் கால யாகபூஜை நடந்தது. இன்று காலை 6 மணிக்கு 6-ம்கால யாக பூஜையும் 8.30மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான மகா குடமுழுக்கும், காலை 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது.

கிராம மக்களின் குலதெய்வமாக ஆலத்தூரில் வீற்றிருந்து காவல் காக்கும் கண்கண்ட தெய்வமாக காருடைய அய்யனார் அருள்பாலிக்கிறார். இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடக்க இருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சித்ரா பவுர்ணமி நாளில் விழா காணும் காருடைய அய்யனார்

ஆலத்தூரில் காருடைய அய்யனார் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வீரனார் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். பக்தர்கள் காவடி, கொப்பரை எடுத்து வந்து அய்யனாரை வழிபடுவார்கள். 3-வது நாள் தேரோட்டம் நடைபெறும். இக்கோவில் தேர் வடம் 90 ஆண்டுகள் பழமையான இரும்பு சங்கிலியால் ஆனதாகும். கோவிலை சுற்றி அய்யனார் தேர் வலம் வரும். இக்கோவிலின் முகப்பின் இருபுறமும் 10 அடி, 15 அடி உயரத்துக்கு மேற்பட்ட குதிரை சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News