ஆன்மிகம்
ஹரித்துவார் கும்பமேளா(பழைய படம்)

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனா பரவும் அபாயம்

Published On 2021-03-23 06:44 GMT   |   Update On 2021-03-23 06:44 GMT
கும்பமேளா தொடங்குவதையொட்டி இப்போதே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்துவாரில் குவிய தொடங்கிவிட்டார்கள். இதனால் பக்தர்கள் மத்தியில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹரித்துவார் :

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதி இமயமலையில் இருந்து வெளியேறி சமதள பரப்புக்கு வரும் இடம் உள்ளது. இது புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.

இங்கு கும்பமேளா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மகா கும்பமேளா வருகிற ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அப்போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

உலகிலேயே அதிக மக்கள் நீண்டநாட்கள் ஒன்று கூடும் திருவிழாவாகவும் இது இருக்கிறது.

கும்பமேளா தொடங்குவதையொட்டி இப்போதே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்துவாரில் குவிய தொடங்கிவிட்டார்கள். இதனால் பக்தர்கள் மத்தியில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் கொரோனாவின் 2-வது அலை வீசத்தொடங்கி உள்ளது. 12 மாநிலங்களில் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

எனவே கும்பமேளா திருவிழாவால் நோய் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அரித்துவாருக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘ஹரித்துவாரில் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

இதுசம்மந்தமாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் உத்தர காண்ட் தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

மத்திய மருத்துவ குழு ஹரித்துவாரில் ஆய்வு மேற்கொண்டதில் தினமும் 20 பேர் வரையில் நோய் தொற்று ஏற்படுவது தெரிய வந்துள்ளது. தினமும் 10 பக்தர்களும், 10 பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இதே நிலைமை தொடர்ந்தால் கும்பமேளா விழா நோய்தொற்றை அதிகப்படுத்தும் நிகழ்வாக மாறிவிடும். எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தற்போதைய பரிசோதனை போதாது. தினமும் 55 ஆயிரம் பேருக்காவது பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவதுடன் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.

தற்போது 32 லட்சம் பக்தர்கள் கும்பமேளாவுக்காக முகாமிட்டு இருக்கிறார்கள். இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள். பக்தர்கள் கூடும் பகுதி முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களை போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும்.

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் என கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வெளிமாநில பக்தர்களை எல்லையிலேயே சோதனை செய்து அனுப்பும் வகையில் சோதனை மையங்களை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News