செய்திகள்
மத்திய மந்திரி அஸ்வினி குமார் சௌபாய் மற்றும் வெங்காயம் (கோப்பு படங்கள்)

நான் ஒரு சைவ உணவுப்பிரியர்.. எனக்கு எப்படி வெங்காயவிலை பற்றி தெரியும் - மத்திய மந்திரி பேச்சு

Published On 2019-12-05 12:43 GMT   |   Update On 2019-12-05 12:43 GMT
நான் ஒரு சைவ உணவுப்பிரியர் எனவும் வெங்காயத்தை தான் ஒருபோதும் சாப்பிட்டதே கிடையாது என்பதால் அதன் விலை உயர்வு பற்றி எதுவும் தெரியாது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில், வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெங்காயம், பருப்பு விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை மந்திரி அஸ்வினி குமார் சௌபாய் தனக்கு நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி ஏதும் தெரியாது என கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘நான் ஒரு சைவ உணவுப்பிரியர். நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை. ஆகையால், எனக்கு எப்படி வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தெரியும்?’’ என அவர் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு சைவப்பிரியர் என்பதால் வெங்காயவிலை பற்றி தனக்கு தெரியாது என கூறிய மத்திய மந்திரியின் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Tags:    

Similar News