தமிழ்நாடு
கேரட், முள்ளங்கியால் உருவான ஒட்டகசிவிங்கி, தனது குட்டியுடன் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது

கோத்தகிரியில் கண்காட்சி தொடங்கியது- காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட விலங்குகளின் உருவங்கள்

Published On 2022-05-07 05:34 GMT   |   Update On 2022-05-07 05:34 GMT
ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை கொண்டாடும் வகையில் பூக்களை கொண்டு ஊட்டி 200 என்ற வாசகமும் வைக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை.

2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி பூங்காவின் நுழைவு வாயிலில் தக்காளி, வெண்டை, பாகற்காய், கேரட், முட்டைகோஸ், காலி பிளவர் உள்பட 25 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காய்கறி கண்காட்சியில் தோட்டக்கலை சார்பில் மீன், கிட்டார் வடிவிலான கடிகாரங்களும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கத்திரிக்காய்களை கொண்டு யானையும், 2 மயில்களும், கேரட்டை கொண்டு டிராகன், முதலையும், பாகற்காய்களை கொண்டு டைனோசரும் செய்யப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ், பீட்ரூட், கத்தரிக்காய் கொண்டு சேவல், கோழி, பாண்டா கரடி, பூசணிக்காயில் கங்காரு, குடை மிளகாய், வெள்ளரிக்காயை கொண்டு இரட்டை கிளி செய்யப்பட்டுள்ளது. கருணை கிழங்கு, பரங்கிக்காய், கத்தரி, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு மீன்களும், முள்ளங்கி, கத்திரியை கொண்டு குதிரையும் பூங்காவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

கண்காட்சியில் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒன்றை டன் கேரட்டை கொண்டு 600 கிலோ எடையில் குட்டியுடன் கூடிய ஒட்டகசிவிங்கி மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை கொண்டாடும் வகையில் பூக்களை கொண்டு ஊட்டி 200 என்ற வாசகமும் வைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா கரடி கப்பல், மீன், டோரா, போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்ட டயர்களை கொண்டு மான், மயில், காட்டுமாடு, கொக்கு, வாத்து, முயல் உள்ளிட்ட வனவிலங்குகளும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் உள்ளூர் மக்களும் பூங்காவில் குவிந்திருந்தனர்.

அவர்கள் பூங்காவில் பல்வேறு வகையான காய்கறிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் பொருட்களை கண்டு ரசித்தனர். மேலும் அவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி பேரூராட்சி துணைத்தலைவர் உமாநாத், நீலகிரி மாவட்ட எஸ்.பி.ஆசிஸ் ராவத், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சப் கலெக்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News