செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு பகுதியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-06-06 22:44 GMT   |   Update On 2020-06-06 22:44 GMT
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படும் என ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 159 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வருவாய்த்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் எந்த தகவலும் இல்லை.

சில ஊடகங்கள் மாணவ - மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெறும். ஆனால் இதுவரை தேர்வு எழுத உள்ள மாணவ -மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை. அப்படி  கொரோனா பாதிப்பு இருப்பதாக மாணவ -மாணவிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தேர்வில் சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் 8-ம் தேதி (திங்கட்கிழமை), 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட உள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்த கணக்கு தெரியவரும். தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ -மாணவிகளின் கல்விக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், இதுதொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை போன்று கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவ -மாணவிகள் தனி வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு, தனி அறையில் தேர்வு எழுத வைக்கப்படுவார்கள். தேர்வு முடிந்ததும் தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இது தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இதுதொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது, பாடத்திட்டத்தின் படி பாடங்களை குறைக்க 4 கல்வியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக முதல்-அமைச்சரும் அவர்களுடன் கலந்து பேசி ஆலோசனைகள் வழங்கி உள்ளார். தற்போது தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பள்ளிக்கூடத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவ -மாணவிகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவ -மாணவிகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கியதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News