செய்திகள்
பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சென்னை குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2019-10-11 08:41 GMT   |   Update On 2019-10-11 08:41 GMT
சென்னை குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரி மட்டுமின்றி புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளும் வறண்டு விட்டன. இதனால் பூண்டி ஏரியிலிருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கும் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் அனுப்புவதும் மார்ச் 26-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இதனால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கல்குவாரி நீர், விவசாய கிணறுகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் இருந்து ரெயில்களில் தண்ணீர் கொண்டு வந்து சமாளித்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 25-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு 28-ந் தேதி வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிக பட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு சராசரியாக 800 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்று காலை புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் பழனிசாமி, கவுரிசங்கர், ரமேஷ் மற்றும் பலர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை திறந்துவிட்டனர்.

புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த நீர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 26.15 அடியாக பதிவானது. 1011 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 542 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் 27 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் குடிநீர் வினியோகம் முழுவதும் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அவ்வப் போது பெய்து வந்த மழை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த பூண்டி ஏரியின் கரையை பலப்படுத்தும பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற பெரிய பாராங்கற்களை கொண்டு கரையை பலப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கிருஷ்ணா தண்ணீர் வராததால் கரையை பலப்படுத்தும் பணிகளுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News