செய்திகள்

அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளனர்- டிடிவி தினகரன் ஆவேசம்

Published On 2019-01-17 05:28 GMT   |   Update On 2019-01-17 05:28 GMT
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
கும்பகோணம்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கும்பகோணம் அடுத்த திம்மங்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கொடநாடு பிரச்சனை பற்றி..?

பதில்:-கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக நடந்து கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய குற்றவாளிகளை கைது செய்ய டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி உள்ளனர். மேலும் கோர்ட்டில், குற்றவாளிகளை காவலில் எடுக்க ஆஜர்படுத்தியுள்ளனர். இதில் ஏதோ பதட்டமும், அவசரத்துடன் தமிழக அரசு செயல்பட்டதாகவே தெரிகிறது.

கொடநாடு எஸ்டேட் 5 பேர் கொலையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வழக்கு விசாரணை வரும்போது சந்தித்து இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி செயல்படுகிறார்கள் என்பதால் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து..?

பதில்:- பாராளுமன்ற தேர்தலில் ஒருசில கட்சிகள் கூட்டணி குறித்து எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொகுதி பங்கீடு குறித்து ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டு சென்றால் கூட, கடந்த 2014-ம் ஆண்டில் ஜெயலலிதா தனியாக நின்றது போல் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. தனியாக போட்டியிடும்.

மக்கள் ஆதரவு என்றும் முழுமையாக எங்களுக்கு உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்களது எம்.பி.க்கள் வெற்றி பெறுவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வசதியுடன் உள்ளார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே?

பதில்:- 60-40 என்ற வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். தி.மு.க.வினர் கேட்கும் டெண்டர்கள் உடனே வழங்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலினும், தினகரனும் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் புலம்பினார். ஆனால் இப்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர். இதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக்கொள்கிறாரா?

கஜா புயல் பாதித்த நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. - தி.மு.க.வினரை கிராம மக்கள் உள்ளே விடவில்லை. ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் கூட்டணியாக உள்ளனர் என்பதால் தான் அவர்களை கிராமங்களுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் காமராஜ் தான் வெற்றி பெற்றிருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
Tags:    

Similar News