செய்திகள்
சுகாதாரத்துறை மந்திரி சைலஜா

கேரளாவிற்கு 4.33 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்தன- சுகாதாரத்துறை மந்திரி

Published On 2021-01-13 11:27 GMT   |   Update On 2021-01-13 11:27 GMT
கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறினார்.

திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16-ந்தேதி தொடங்க உள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசி மருந்துகளை பயன் படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்ஆப் இந்தியா மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 5.56லட்சம் தடுப்பூசிகள் நேற்றுவந்தன. அதேபோல் கேரள மாநிலத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்தன.

மொத்தம் 4லட்சத்து 33ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வந்துள்ளன. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறியதாவது:-

கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4,33,500 தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒரு தடுப்பூசிக்கான செலவு ரூ200 ஆகும். முதற்கட்டமாக அவை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிகள் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு பகுதியில் உள்ள மண்டல மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிகபட்சமாக எர்ணா குளத்திற்கு 1,80,000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல் திருவனந்தபுரத்திற்கு 1,34,000 தடுப்பூசிகளும், கோழிக்கோட்டிற்கு 1,19,500 தடுப்பூசிகளும் அனுப்பப்படும். கோழிக்கோட்டிற்கு வரும் தடுப்பூசிகளில் 1,100 தடுப்பூசிகள் புதுச்சேரி மாநிலம் மாகியில் பயன் படுத்தப்படுகிறது.

தடுப்பூசிகளை அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கேரள மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ந்தேதி தொடங்குகிறது. 133 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போடுவதற்கு தற்போது வரை 3,62,870பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். அவர்களில் 1,70,259பேர் அரசுத்துறைகளையும், 1,92,611பேர் தனியார் துறைகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News