செய்திகள்

புதிய சாதனையை நெருங்கும் விராட் கோலி

Published On 2019-06-27 05:33 GMT   |   Update On 2019-06-27 05:33 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைக்கவிருக்கிறார்.
மான்செஸ்டர்:

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது.

34-வது ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த உலக கோப்பை போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்தியா இருக்கிறது. 4 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துடன் மோத வேண்டிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்திய அணியின் ஆதிக்கம் இன்றைய போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

விராட்கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் மேலும் ஒரு புதிய சாதனை படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். அதற்கு அவருக்கு இன்னும் 37 ரன்களே தேவை.

கோலி 416 இன்னிங்சில் விளையாடி 19,963 ரன் எடுத்து உள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் 11,087 ரன்னும் (223 இன்னிங்ஸ்), டெஸ்டில் 6613 ரன்னும் (131), 20 ஓவர் போட்டியில் 2263 ரன்னும் (62) எடுத்து உள்ளார்.

20 ஆயிரம் ரன்னை கோலி 417-வது இன்னிங்சில் கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் தெண்டுல்கர், லாரா சாதனையை முறியடிப்பார். இருவரும் 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ் சர்வதேச போட்டியில் 20 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தார்.

இந்த ரன்னை எடுத்த 3-வது இந்தியர், சர்வதேச அளவில் 12-வது பேட்ஸ் மேன் என்ற பெருமையை கோலி பெறுவார்.

தெண்டுல்கர் சர்வதேச போட்டிகள் அனைத்திலும் சேர்ந்து 34,357 ரன் எடுத்து (782 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 24,208 ரன்னுடன் (509 இன்னிங்ஸ்) 6-வது இடத்தில் உள்ளார். இவர்கள் வரிசையில் கோலியும் இணைகிறார். சங்ககரா (28,016 ரன்) 2-வது இடத்திலும், பாண்டிங் (27,483) 3-வது இடத்திலும் உள்ளனர்.

கோலி ஏற்கனவே இந்த தொடரில் 11 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து இருந்தார்.

30 வயதான விராட்கோலி இந்த உலக கோப்பை தொடரில் 3 அரை சதத்துடன் 244 ரன் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்னும், பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்னும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67 ரன்னும் எடுத்தார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணி 1 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

அந்த அணி பாகிஸ்தானை மட்டும் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா, வங்காள தேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றிடம் தோற்று தென்ஆப்பிரிக்காவுடனான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் வெஸ்ட்இண்டீஸ் இருக்கிறது.
Tags:    

Similar News