செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் பரவலாக மழை - குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-09-20 09:39 GMT   |   Update On 2021-09-20 09:39 GMT
மழையால் காலையில் பணிக்கு சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருப்பூர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. 

தொடர்ந்து பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் திருப்பூர் வள்ளியம்மை நகர் 4வது வீதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து அங்கிருந்த கார் மீது விழுந்தது. 

காங்கயம் ரோடு, புதூர் பிரிவில் உள்ள புளியமரம் சாய்ந்து மின் வயர்கள் மீது விழுந்தது. இதனால் மின் வயர்கள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. 

இதேபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று மாலை முதல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. 

இன்று காலை மாநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. காலையில் பணிக்கு சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.  

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  
Tags:    

Similar News