செய்திகள்
வைகோ

‘தமிழ் ஈழம்’ நாடு அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்

Published On 2021-06-10 14:21 GMT   |   Update On 2021-06-10 14:21 GMT
இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம்தான் இருக்க முடியும் என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீன சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.

இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம்தான் இருக்க முடியும்.


2021 மே 18-ம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் 117-வது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப்பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.

இலங்கையில் போரின் போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் நெறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை இந்த தீர்மானம் வலியுறுத்துகின்றது.

அமெரிக்க நாடாளுமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றது. எனவே, உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற் கான முயற்சிகளை, இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News