செய்திகள்
கோப்புப்படம்

புனேயில் பலத்த மழை - வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி

Published On 2020-10-16 00:44 GMT   |   Update On 2020-10-16 00:44 GMT
புனேயில் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்கப்பட்டனர்.
மும்பை:

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மராட்டியத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் இரவு வரை மழை வெளுத்து வாங்கியது. புனேயில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்தநிலையில் அன்று மாலை கானோட்டா கிராமத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய கால்வாயை 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கடந்து செல்ல முயன்றனர். அப்போது துரதிருஷ்டவசமாக 4 பேரும் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடினர். இதில் 3 பேர் நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புனேயில் 9.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல மராட்டிய தலைநகர் மும்பையிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாதா் இந்து மாதா, கிங் சர்க்கிள், காலாசவுக்கி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. நகரில் 24 மணி நேரத்தில் 10.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News