செய்திகள்
கடலில் விசைப்படகில் தத்தளித்த காசிமேடு மீனவர்களை படத்தில் காணலாம்.

ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்று மாயமான காசிமேடு மீனவர்கள் 9 பேர் 55 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published On 2020-09-14 21:27 GMT   |   Update On 2020-09-14 21:27 GMT
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று மாயமான 9 மீனவர்கள், 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டு கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருவொற்றியூர்:

சென்னை காசிமேடு நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்தீபன், லட்சுமணன், தேசப்பன், பாபு, முருகன், ரகு, சிவா, மற்றொரு தேசப்பன், பிரபாகரன் ஆகிய 9 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த மாதம் 17-ந் தேதி கரைக்கு திரும்ப வேண்டிய அவர்கள், மேலும் 10 நாட்களாகியும் கரைக்கு திரும்பி வராததால், அவர்களது குடும்பத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனரகத்திலும், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

அதன்படி கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து கப்பல்கள் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் நேற்று பத்திரமாக மீட்டனர்.

நடுக்கடலில் என்ஜின் பழுதடைந்து விசைப்படகு நின்றுவிடவே வயர்லெஸ் மூலம் அருகிலுள்ள திசைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் உதவ முன் வராததால் விடைப்படகு காற்றின் வேகத்தால் மெல்ல மெல்ல அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் ஜி.பி.எஸ். கருவியும் செயல் இழந்துவிட்டது.

இந்த நிலையில் 55 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள மியான்மர் நாட்டின் எல்லைக்கு நேற்று அதிகாலை படகு சென்றுள்ளது. அங்கு ரோந்து பணியில் இருந்த மியான்மர் நாட்டு கடற்படையினர் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அங்கு இருந்து விசைப்படகு டிரைவர் உரிமையாளருக்கு நேற்று அதிகாலை தகவல் தெரிவித்தார். அவர் இங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மியான்மர் நாட்டில் உள்ள மீனவர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல் படை மற்றும் சென்னை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளை கொண்டு காணாமல் போன மீனவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை வழியாக மியான்மர், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து கடல் பகுதியிலும் மாயமான மீனவர்களை தேடும் பணிகள் நடந்தன.

இந்த நிலையில் மியான்மர் நாட்டு கடற்படையினரால் 9 மீனவர்களும் நேற்று அதிகாலை பத்திரமாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக தகவல் பெறப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News