இந்தியா
பசவராஜ் பொம்மை

மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது உறுதி: பசவராஜ் பொம்மை

Published On 2021-12-22 01:50 GMT   |   Update On 2021-12-22 01:50 GMT
காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதலை பெற்றவுடன் மேகதாது திட்டத்தை தொடங்குவோம். இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்கவில்லை என்று பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று மேகதாது திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசியதாவது:-

மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடியில் 67.16 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணையை கட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். திட்ட அறிக்கையை அந்த ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதேபோல் மத்திய நீர் ஆணையம், சுற்றுச்சூழல்-வனத்துறையின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதலை பெற்றவுடன் மேகதாது திட்டத்தை தொடங்குவோம். நாங்கள் ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இதற்கிடையே மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மேகதாது முதல் பெங்களூரு வரை பாதயாத்திரை வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி தொடங்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News