உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பரிசோதனை செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுமா?

Published On 2022-04-17 06:49 GMT   |   Update On 2022-04-17 06:49 GMT
மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையில் தரமற்ற குடிநீரால் பல்வேறு உடல் உபாதைகள் மக்களுக்கு ஏற்படுகிறது.
மடத்துக்குளம்:

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பற்றாக்குறை ஏற்படும் போது உள்ளூர் நீராதாரங்களான போர்வெல், கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர், கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீருடன் கலந்து குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப் படுகிறது.

மேலும், தரைமட்ட மற்றும் சிறிய தொட்டிகள் வாயிலாக நேரடியாகவும், குடிநீர் வினியோகம் உள்ளது. கிராமங்களிலுள்ள மேல்நிலைத்தொட்டிகளை முறையாக பராமரிக்காதது, இரு வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை கலப்பது, பிரதான குழாய் உடைப்பு வழியாக கழிவுநீர் உட்செல்வது உள்ளிட்ட காரணங்களால் குடிநீரின் தரம் பாதிக்கிறது.

இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையில் தரமற்ற குடிநீரால்  பல்வேறு உடல் உபாதைகள் மக்களுக்கு ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக முன்பு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரை சம்பந்தப்பட்ட பகுதியிலேயே ஊராட்சி நிர்வாகத்தினர் பரிசோதிக்க பயிற்சி கொடுக்கப்பட்டது.

இதற்காக களநீர் பரிசோதனை பெட்டியும் வழங்கப்பட்டது. இப்பெட்டி வாயிலாக தண்ணீரின் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, புளூரைடு, இரும்பு உப்பு, அமோனியா, நைட்ரேட், பாஸ்பேட் மற்றும் குளோரின் ஆகியவற்றை பரிசோதிக்கலாம்.

ஆனால் களநீர் பரிசோதனை பெட்டியை பயன்படுத்தி, ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீரின் தரத்தை கண்டறிவதில்லை. இத்திட்டத்தையும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். பரவலாக மழை பெய்துள்ள நிலையில் உள்ளூர் நீராதாரங்களிலிருந்து பெறப்படும் தண்ணீரின் தன்மையில் மாற்றம் ஏற்படும்.

இந்த தண்ணீரை பரிசோதிக்காமல் வினியோகிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளது. எனவே,குடிநீரை குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்து வினியோகிக்க, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News