செய்திகள்
குமாரசாமி

மத சார்பற்ற ஜனதா தளம் புதிய பாதையில் பயணிக்கும்: குமாரசாமி

Published On 2021-01-07 01:44 GMT   |   Update On 2021-01-07 01:44 GMT
சங்கராந்தி பண்டிகை முதல் ஜனதா தளம் (எஸ்) புதிய பாதையில் பயணிக்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
ராமநகர் :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் ெசன்னப்பட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கிராம பஞ்சாயத்து தேர்தலில் எங்கள் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். ெசன்னப்பட்டணாவில் குமாரசாமியை ஒழிக்க வேண்டும் என்று சிலர் கூறினர். அவர்களுக்கு கிராமப்புற மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெற கட்சிகள் முயற்சி செய்ய வேண்டும். பணம் மூலம் வெற்றி பெறலாம் என்று நினைத்தால் அது நீண்ட காலம் நீடிக்காது.

கட்சிகள் சார்பற்ற முறையில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று உள்ளது. இங்கு கட்சிகள் என்ற பேச்சு வருவது இல்லை. கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் உள்ளூர் அளவில் வெற்றி பெற்றவர்கள் கூடி அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள். தான் மந்திரி ஆவதாக சி.பி.யோகேஷ்வர் கூறிக்கொண்டு திரிகிறார். இந்த பகுதியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாறுதலுக்கு சி.பி.யோகேஷ்வர் ரூ.30 லட்சம் கேட்பதாக தகவல் வந்துள்ளது.

ரூ.30 லட்சம் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்கு செல்லும் அதிகாரி, ஏழை மக்களிடம் தான் வசூலிப்பார். ராமநகர் மாவட்ட மக்கள் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் இழுக்க முயற்சி செய்கின்றன. அந்த கட்சிகளுக்கு பலம் இல்லை என்பதால், எங்கள் கட்சியினரை இழுக்கிறார்கள். நான் எந்த கட்சியின் தலைவரின் வீட்டுக்கும் சென்று, எங்கள் கட்சிக்கு வாருங்கள் என்று கூற மாட்டேன்.

சங்கராந்தி பண்டிகை முதல் ஜனதா தளம் (எஸ்) கட்சி புதிய பாதையில் பயணிக்கும். கட்சிக்கு புத்துயிர் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

Similar News