செய்திகள்

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

Published On 2019-03-25 16:19 GMT   |   Update On 2019-03-25 18:17 GMT
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #RRvKXIP
ஐபிஎல் 2019 சீசனின் 4-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராகுல் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கெய்ல் உடன் மயாங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. மயாங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உனத்கட் வீசிய 12-வது ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன், ஒரு சிக்சருடன் அடித்து 33 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். 16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் அடித்த கெய்ல், 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார்.

கெய்ல் ஆட்டமிழக்கும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் 15.5 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது உடன் பூரன் ஜோடி சேர்ந்தார். கெய்ல் ஆட்டமிழந்ததும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோர் அப்படியே ஸ்தம்பிக்க ஆரம்பித்தது.



19-வது ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தில் பூரன் 12 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். கடைசி பந்தை சர்பிராஸ் அகமது சிக்ஸ் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது.

இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது 29 பந்தில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரகானேவும், பட்லரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். அஸ்வின் வீசிய 4-வது ஓரில் ரகானே போல்டாகி வெளியேறினார். (27) ரன் எடுத்தார். 

அடுத்து வந்த சாம்சன் பட்லருடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். பட்லர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். பட்லர் 69 ரன் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் களம் வந்த ஸ்மித் 20 ரன் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே திரும்பியதால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 170 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #RRvKXIP
Tags:    

Similar News